Tuesday, December 23, 2014

அன்பும் அறனும்

தேடித் தேடிப் பார்த்தேன்
அன்பும் அறனும் எங்கே?
அன்பும் அறனும் இங்கே
புழுகல் பொய்யாய்ப் போனதே!

மனம் ஒத்த திருமணம் துறந்திங்கு
பணம் ஒத்த திருமணம் கொணர்ந்தோம்!
இன்சொல் பேசிட மறந்திங்கு
ஏய்த்துப் பிழைத்திட அறிந்தோம்!
அன்பினை முடிச்சிட்டு எறிந்தோம்!!

பகிர்ந்து உண்டிட மறந்திங்கு
திருடிச் சேர்ப்பதை அறிந்தோம்!
திண்ணை வீட்டினைத் துறந்திங்கு
இரப்பாரை விரட்டிட அறிந்தோம்!
அறத்தினைக் குழியிட்டுப் புதைத்தோம்!!

அன்பும் அறமும் இங்கே
புழுகல் பொய்யாய்ப் போனதே!
பண்பும் பயனும் இன்றி
குப்பைக் குவியலாய்ப் போனதே!

அன்பின் வழியது உயிர்நிலை
அறத்தின் வழியது உயர்நிலை!
இவையாவும் நமக்குத் தெரிநிலை!
தெரிந்தும் நாமிதற்கு எதிர்மறை!

விடியும் நாளது மறைநிலை!!

                                           -         ராம் இளன்

Wednesday, July 9, 2014

இரண்டாம் தாரம்

முதல் தாரம் -

இதுவென புரியாதோர் வயதிலே
இவளென பொதித்தார் மனதிலே !

பெண்ணின் வளமையும் அதிகமே
‘பொன்’னின் வளமையும் அதிகமே !

விழுந்தேன் காதல் வலையிலே
எழுந்தேன் அவளின் மடியிலே !

அவள் முத்தமே என் பதக்கம்
அவள் தழுவலே என் விழுது !

மனம் கொடுத்து மணம் கொண்டேன் !!

ஆசை அது தீர்ந்ததோ?
தீர்ந்தால் அது ஆசையோ?


இரண்டாம் தாரம் -

அது தென்றல் வீசும் கல்லூரிக்காலம்
இளவேனில் தேடும் கனாக்காலம் !

எண்ண இயலா இமைப்பொழுதில்
என்னைக் குத்தினாள் இமைஅழகி !

‘பொன்’அழகு இல்லாதொரு பெண்ணழகு
இன்னதென்று விளங்காதோர் இன்னல் !

கிறங்கினேன் அவள் திரட்சியில்
மயங்கினேன் அவள் மொழிகளில்
உருகினேன் அவளைத் தீண்டையில் !!

மறுபடியும் ஒரு
மனம் கொடுத்து மணம் கொண்டேன் !!


குழப்பம் -

காமம் அது தீர்ந்தாலும்
சாபம் அதும் முளைத்தது

சக்காளத்திகள் சண்டை
சக்கையாய் என்னைப் பிழிய
சிக்கித் தவிக்கிறேன் நான் !!

இரண்டு பெண்டிரும் இருபுறம் இழுக்க
மிரண்டு போய்தான் துடிக்கிறேன் நான்

காதலும் இருவரிடம்
மோகமும் இருவரிடம்
பாதை தேர்ந்திட
யார்தான் உதவுவார்?


உருவகம் : 

முதல் தாரம்            : பொறியியல்
இரண்டாம் தாரம்   : இலக்கியம்

Metonymy :
First Wife                        : Engineering
Second Wife                   : Literature


        -   படைப்பு    :  ராம் இளன்

Friday, January 17, 2014

சிறு வீட்டுப் பொங்கல் - பழந்தமிழரின் Valentines Day

மரபை மறவோம் #01

பழங்காலத்தில் பெண்கள் அதிகம் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை என்பது யாவரும் அறிந்ததே! இருப்பினும் காதற் களவியல் எவ்வித குறையும் இன்றி தழைத்தோங்கியது நம் இலக்கியங்களில் இருந்து தெளிவாகின்றது. இது எப்படி சாத்தியம்?

தைப்பொங்கலுக்கு முன்பு வரும் மார்கழித்திங்கள் காதலின் திங்கள்



மார்கழிக்குளிரில் அதிகாலை துயிலெழுந்து, பொய்கையில் நன்னீராடி,பூக்களைக் கொய்து, வாசலில் வண்ணக்கோலங்களாய் கலைத்திறமை காட்டி, சாணப் பிள்ளையார் பிடித்து அழகுற அமைத்து, செம்பருத்தி, பூசணி, தங்க அரளி, பீர்க்கம்பூ போன்ற பூக்களால் சாணப் பிள்ளையார்களை அலங்கரித்து வைப்பர். பின்பு மதிய வேளையில் பூவுடன் சேர்த்து சாணப்பிள்ளையார்களையும் வறட்டி தட்டி வீட்டுக்கூரையின் மேல் காயவைத்து விடுவர். இச்செயல் மார்கழி மாதம் முழுவதும் தொடரும்.



அத்துடன் அக்கன்னிப்பெண்கள் தம் வீட்டு முற்றத்தில் சாணம், களிமண் கலந்த கலவை கொண்டு ஒரு சிறிய பொம்மை வீட்டினை வடிவமைப்பர். தைப்பொங்கல் முடிந்தவுடன் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நன்னாள் குறித்து இந்த சிறு பொம்மை வீட்டின் முன்பு அப்பெண்கள் மீண்டும் ஒரு பொங்கல் இடுவர்.

அவ்வாறு இட்ட பொங்கல் தட்டி வைத்த சாண வறட்டிகள் தேங்காய் வெல்லம் முதலியவற்றை ஒரு தாம்பூலத்தில் வைத்துக் கொண்டு நல்லுடை உடுத்திக்கொண்டு ஊரின் அனைத்து கன்னிகளும் கைகோர்த்து ஊர்வலமாய் சென்று அருகிலுள்ள நீர்நிலையைச் சென்றடைவர். அங்கு அனைவரும் விளையாடி மகிழ்ந்து தாம்பூலத்தில் கொண்டு வந்த சாணவறட்டிகளை நீரில் கரைத்து உணவுப் பொருட்களை மீன்களுக்கு இரையிடுவர். முடிந்ததும் ஊர்வலமாய் வீடு திரும்புவர்.



தேவதைகள் வீதியை மெருகேற்றி செல்லும்போது ஊரின் இளங்காளையர்களது நிலைமை சொல்லியா தெரிய வேண்டும்?

எளிதில் சந்திக்க இயலா கன்னியர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் வாய்ப்பு ஆடவர்க்கு வருடத்தின் இந்த நாளில் மட்டுமே கிடைக்கும். அவிழ்த்து விட்ட கன்றுகளைப் போல் கன்னிகளும் தம் காதற்குரியவரை சந்தித்து தம் விருப்பத்தைத் தெரிவிக்கவும் இதுவே வாய்ப்பு. சிறு வீட்டுப் பொங்கல் தினத்தன்று உதிக்கும் காதல் களவியல் பழகி விரைவில் திருமணம் எய்தி கற்பியலாய் வளர்கின்றது. 

இன்னாளே பழந்தமிழர்களின் “காதலர் தினம்”. இந்த சிறுவீட்டுப் பொங்கல் சடங்கு இன்னாளில் “காணும் பொங்கல்” என உருமாறிவிட்டதோ என தொனிக்கின்றது. ஆயினும் திருநெல்வேலி நாகர்கோவில் மாவட்ட கிராமங்களில் இக்காலத்திலும் இந்த முறை சிறிய அளவில் நடைமுறையில் உள்ளது.

இன்றைய காலத்தில் இச்சடங்கு தேவையற்றது என தோன்றினாலும் நமது மரபுகளைக் காக்க வேண்டியது நமது கடமையன்றோ! நாத்திகர்களும் பண்டிகை கொண்டாடுவது போல் நாமும் இம்மரபு விழாவைத் தொடர்வோம்!



- ராம் இளன்

Monday, December 9, 2013

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

விதையாய் உதிரமிட்டு வேர்வை அதைத்தெளித்து
ஊனை உரமாக்கி மூச்சைப் பயிராக்கித்
தன்னை உணவாக்கி நம்மை வளமாக்கும்
உண்மை உழவனைப் பார்

பருவம் தடுமாறி மாரி அதும்மாறி
நீரும் நிறம்மாறி ஆறும் உருமாறி
பச்சை வயல்மாறி காய்ந்த நிறமாக
அச்சம் பிணைத்தவனைப் பார்

இரசாயனம் நம்பி விவசாயம் கெட்டு
விசாலமும் இன்றி வயல்கள் அருகி
விளைச்சலும் பொய்க்க உழவர் உள்ளம்
உளைச்சலில் தேய்வதைப் பார்

இளைஞர் படைதிரண்டு கட்டை உடைத்தெறிந்து
காணி களங்கண்டு நாட்டை வளமாக்கின்
இன்னுயிரை ஈவாக்கும் துன்பக் கணக்கினை
காற்றில் கரைத்திட லாம்

மென்பொருள் யாதுமே உண்பொருள் தாராது
ஒண்பொருள் என்றுமே மண்பொருள் கிண்டிடும்
வேளாண்மை ஒன்றுதான் என்றுணர்ந்து நீயும்
வேளாண்மை கற்றதைப் பேணு !!

    -  ராம் இளன்

(ஈகரை தமிழ்க் களஞ்சியம் கவிதைப் போட்டியில் பரிசு வென்ற கவிதை)

Sunday, September 8, 2013

பாராட்டு மடல் - புத்தகத்திற்கு

‘இளவேனிற் கனாக்கள்’ – கவிதைத் தொகுப்பு படைப்பாளர்
தமிழ்த்திரு. ராம் இளன் அவர்கட்கு

பாராட்டு மடல்

மௌன ஞானியே ! உனை
ஈன்ற அன்னைக்கும்
சான்றோனாக்கிய தந்தைக்கும்
நற்கல்வி கற்பித்தோர்க்கும்
நற்பெயர் பெற்றுத்தந்து
சீர்மிகு கடமையில் சிறந்தவன் - நீ !

வாழ்வாதார வளம்சேர்க்க
அந்நிய மொழிவழி பொறிஞர் பட்டம் !
வாழ்வு சிறந்து வானுயர்ந்தோங்க
அன்னைமொழிவழி கவிஞர் பட்டம் !!

ஈரடிக்குறளில் இருவிழி நிலைத்து
கருத்து வழிப் புகுந்து நவீனம் புகுத்தி
தரம்தரமாய் புதுக்குறள் படைத்த
தமிழ்ப்புலவன் நீ…! – உன் படைப்பில்
தேசம் கண்டேன் பாசம் கண்டேன்
தேசம் பயனுற நல்லுரையும் கண்டேன்
வேளாண் பெருகிட உழவன் நலம் பெற
கழனி செழித்திட நன்னெறியுரையும் கண்டேன்
என்னே நின் புலமை !!
எழுத்து சொல் பொருள் யாப்பு அணி
ஐந்தும் ஐந்தின் வகைகளுமறிந்து
இலக்கணத் திரிபற்றுத் தமிழில்
மரபுக்கவி யாக்கும் ஆற்றலை
யாரிடம் பெற்றாய் ?! எவ்விதம் பெற்றாய் ?!

தமிழன்னைத் தானே தன் மடி சுரந்து – உன்
செவி வழி ஞானப்பால் புகட்டினாளோ ?!
இல்லையில்லை. இருக்க முடியாது – உன்
‘இளவேனிற் கனாக்களில்’ நானுறைந்த மட்டில்
தமிழன்னையைத் தேடித்தேடி – நாடியோடி
தமிழன்னையின் மடியமர்ந்து – தானே
தமிழ்ப்பால் அருந்தியவன் நீ…!
தமிழ்ப்பால் அருந்தியதன் நன்றியாக
தமிழன்னைக்கு அணியழகு சேர்க்கப்
புறப்பட்ட இளன் நீ…!

முட்டையினோட்டைத் தன்அலகினால்
முட்டியுடைத்து முழுக்குஞசாய் - தானே
வெளிவந்த தமிழ்க்கவிஞன் நீ !
தமிழ்ச் சேவலாய் வளர்ந்து - இளந்
தமிழர்களை வைகறைத் துயிலெழுப்பு இனி !!

இளவேனிற் கனாக்கள் மெய்ப்படும் - உனக்கு.
இனியவாழ்வு இனியுன் வசப்படும்.
வாழ்த்துகிறேனுனை மனமுவந்து – நீ !
வெற்றிமேல் வெற்றி பெற்று – பலர்
போற்ற வாழ்வாய் நனிசிறந்து.

வாழ்க வளமுடன் !!

என்றும் அன்புடன்
இ. சுப்பையா
மேலச்செவல்
திருநெல்வேலி மாவட்டம்.

Friday, August 16, 2013

இளவேனிற் கனாக்கள் - புத்தகம் - ஒரு பார்வை

Review of my book 'Ilhavenir Kanaakkal' by

Prof. Rajalakshmi Vijayakumaaran,
Department of Tamil,
Jawahar Arts and Science College,
Neyveli.



  பாவேந்தர் பாரதிதாசன் கூட 18 வயதில் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அவர்போல் ராம் இளன் - 21 வயதில் பொறியியலில் என்.ஐ.டி. யில் பொற்பதக்கம் பெற்றவர்!

கருவே – திருவுடையார்
ராம் இளன் !!

மெஞ்ஞானத்தில் இருந்து விஞ்ஞானம் - ஆன்மாவை அறிவதே ஆன்மீகம் - பாரத பூமி புண்ணிய பூமி – அதில் தமிழகம் சிறப்புடையது – கோவில்கள் நிறைந்த மாநிலம் - கோபுரங்கள் உயர்ந்த கோவில்கள் - கோபுரங்களில் கலசங்கள் - கலசங்களில் நல் வித்துக்கள் - அவ்வித்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன – அவை அழிந்து போகாதவை – அப்படித்தான் தமிழ் மொழியும் அதில் தோன்றிய மரபு கவிதைகளும் !!

மரபுக் கவிதைகள் நல்வித்துக்கள். அதை அவ்வப்போது எடுத்து புதுப்பிக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகம் போல். தம்பி ராம் இளன் படைத்த படைப்புகளும் நல்வித்துக்களே !!

ராம் இளன் :

தமிழ் உள்ளங்களை நோக்கி அம்பு விடுகிறார். இளவேனிற் கனாக்களுடன். ஆம். அவை காமனின் மலர் அம்புகளாக மணக்கின்றன. உள்ளத்தில் இன்ப அலையை எழுப்புகின்றன. 

நீல வானம் மேலே. கீழே பசும்புல் பச்சைக் கம்பளமாக விரிந்திருக்க - இளம் வேனில் கனாக்களோடு ‘தொலைநோக்குப் பார்வையுடன்’ ராம் இளன் - இதுவே புத்தகத்தின் அட்டைப்படம்.

உள்ளே…

முதல் பக்கத்தை தமிழ் கோலம் அலங்கரிக்கிறது. அதன் நயமும் அழகும் விரிவாய் கடைசிப்பக்கம்.

இடையே தமிழ்ச்சொற்கள் தடம்பதித்து நடமாடää மரபுக்கவிதையாய் புதுகடகுறள் பூத்து - காதல் கவிகள் தாவி – பொதுக்கவிகள் மலர்ந்து – சித்திரக்கவிகள் சிந்தையைத் தூண்ட தமிழும் காதலும் மரபோடு உறவாடி விளையாட.. பக்கங்கள் மெதுவாய் நகர்கின்றன.

தமிழ்க்கோலத்தைத் தொடந்து நன்றியைக் காணிக்கையாக்கி வணங்குகின்றார். ஆளாக்கி – கவியாக்கி – நூலாக்கியோரை எல்லாம் போற்றுகிறார்.

அணிந்துரை வழங்கிய சான்றோர் இலக்கண ஆழம் கண்ட வித்தகர். பிறரை மெச்சுவதிலும் வித்தகர். மருதூர் அரங்கராசன் அவர்கள். அவரின் அணிந்துரை இந்நூலுக்கு ஆழமான பொருளுரை – சிறப்புரை – பாராட்டுரை. அழகுக்கு அழகு கூட்டும் அணிந்துரை.

நூலாக்கம் செய்து தந்த ராசி பதிப்பகம் இந்நூலை குறுகிய காலத்தில் விரைவாக செம்மையாக பதிப்பு அளித்துள்ளமை பாராட்டுதற்குரியது.

ராம் இளன் - 
மரபு மீறா மாண்பாளர் - இவர்
ஆளுக்குள்ளும் தெரிகிறது
நூலுக்குள்ளும் புரிகிறது.

என்.ஐ.டி. யில் பயின்றும் வெளிநாடு பறக்காமல் மரபுகாத்து – தாய்மண்ணிற்கு உழைப்பை நல்கும் உத்தமர் என்று ஆளுமை உணர்த்துகிறது.

நாற்திசை
நானிலம்
நூல் வேதம்
நாற்பொருள்
போல – நூலை நான்கு பகுதியாய் பகுத்து அமைத்து முறையாக முத்தம் பதித்துள்ளார்.

தலைப்புக்கு இடப்படும் ‘எண்’ தமிழாக அமைந்துள்ளது !!

முதலதிகாரம் - தமிழதிகாரம். தமிழுக்கு யாருமே உரைக்காத உவமை தேடி

     “அண்டங்கள் ஆய்ந்தும் கிடைத்தில என்றும்
       உனக்குவமை காட்டுவ(து) ஒன்று”

என வியக்கிறார் அன்னைத் தமிழை.

உள்ளே செல்லும் முன் என் கருத்து ஒன்று

“எதுக்கப்பா யாப்பு பாப்பு
மின்னலைப் பிடித்து வைக்கவா
சட்டைப் பை தைப்பு?”

என கவிபாட தூண்டுகிறது.

ராம் இளன் - ‘மின்னல் ஒளியும் ஓசையும் கொண்ட கவி அருவி”
நீ மரபுக்கோட்டையைத் தாண்டிவந்தால் குழந்தையும் ஓடிவரும் உன் பாடல் கற்க.

பகுதி 1 – புதுக்குறள் :

தமிழதிகாரம்:

11 தலைப்புகள் கொண்டவை. ஒவ்வொன்றும் இக்காலச் சூழலைப் படம்பிடித்துக் காட்டும் பதிவுகள்.

       “தமிழுக்குச் செய்த உறுபணி தந்திடும்
        பொன்றுந் துணையும் புகழ்”

ஒருவன் தமிழுக்கு அரும்பணி செய்தால் என்றும் அழியாத புகழினைப் பெறுவான். உரையும் உரைக்கின்றார்.

‘தமிழ்ப்பணி ஆற்றும் பிறமொழியார் மாண்பு
மலையினும் மாணப் பெரிது”

ஆம் இன்றும் போற்றுகின்றோம் கால்டுவெல் வீரமாமுனிவர் ஜீ.யூ.போப் போன்றோரை.

திருக்குறள் மாலை:

திருவள்ளுவ மாலை போல் திருக்குறள் மாலை படைத்துள்ளார். கடவுள் துகள் - என்று கண்டறிந்த ஹிக்ஸ் போசான் ஆய்வுச் செய்தியை நினைவுபடுத்துகிறார்.

“போசான் துளைத்தேழ் கடலைப் புகட்டித்
குறுகத் தறித்த குறள்”

அணுவில் உள்ள நுண்ணிய பொருள் (சிறிய துகள் - கடவுள் துகள்) போசான். அந்த நுண்பொருளைக் குடைந்து கடல்போன்று பெரும் அளவினை வெளிக்கொணர்வதைப் போன்றுää வள்ளுவர் ஒவ்வொரு சிறிய குறளின் மூலமும் பெரும் கடலளவுக் கருத்தை வெளிக்கொணர்கிறார் என்று விளக்கம் அளிக்கிறார்.

“வாழ்க்கையின் வண்ணம் முழுமையும் நூலுக்குள்
ஆழ்த்திடல் வள்ளுவன் மாண்பு”

என திருக்குறளைப் போற்றுகின்றார். இக்குறளின் வழி ராம் இளனின் சிந்தனை நுட்பம் புரிகிறது.

கையூட்டு:

சிறுகதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஸ்ரீ நாராயணகுருவின் - குரு – சட்டர்ஜியை அரசு அதிகாரி அழைத்து தன் இல்லத்திற்கு விருந்துண்ண அழைக்கிறார். குருவும் சம்மதித்து என்னுடன் என் சீடர்களும் வருவார்கள் எனக் கூறுகிறார். அதிகாரி அதனை ஏற்றுக்கொள்கிறார். விருந்து நாளும் வந்தது. குறித்த நேரத்திற்கு குரு அந்த இல்லத்திற்குச் செல்கிறார். எல்லோரும் பார்க்கிறார்கள் குரு மட்டுமே வந்துள்ளார். சீடர்கள் வரவில்லை. உணவு பரிமாறுங்கள் சீடர்கள் வருவார்கள் என்று சொல்லி வெளியில் சென்று அழைக்கிறார். 10 – 15 நாய்கள் அமைதியாக வந்து இலையில் பரிமாறப்பட்ட உணவை உண்டுவிட்டு அமைதியாகச் சென்றன. எல்லோரும் வியந்து பார்க்கிறார்கள். குரு சொல்கிறார். இவர்கள் போன பிறவியில் உயர் அரசு அதிகாரிகள். இலஞ்ச லாவண்யம் பெற்றவர். இப்பிறப்பில் இந்நிலை!!

ராம் இளன் காலத்திற்கு ஏற்ற கருத்துக்களை விதைத்துள்ளார். சுவை பயன் தரும்.

“இரத்தல் இழிவென்றுச் சொன்னால் மிரட்டி
இரப்பதை என்சொல் இடல்”

“கையூட்டு நீங்கிடும் நாள்நம் வளர்ச்சியின்
காற்பூட்டு நீங்கிடும் நாள்”

என்கிறார். மருதூரார் எப்போதும் கூறுவார் “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்”. இவை நினைவில் நின்றவை. காலத்திற்கு ஏற்றவை.

சமூக சேவை:

“ஆதரவு அற்றோர்க்கு ஈவார் கரவா
கடையேழு வள்ளலினும் மேல்”

சமூக சேவை புரிபவரை ஆதரவு அற்றோரைப் பேணுகின்றவரை வள்ளலினும் மேல் எனப் போற்றுகின்றார்.

சச்சின் 10(0):

சச்சினின் சாதனையைத் தன்குறளில் போற்றுகின்றார். நம் மக்களின் மயக்கம் அறிந்து.

சுற்றுச்சூழல்:

சுற்றுச்சூழல் காத்தல் நமது கடன். கடமை உணர்வுடன் நமக்கு உணர்த்துகின்றார். கவிதைகளில் நெகிழித் தன்மை - புவி வெப்பமடைவதன் காரணம் - மின்சாரச் சிக்கனம் - நீர் மாசுபடுதல் - காடுகளின் பெருமை – மறுசுழற்சி முறை ஆகியவற்றை வள்ளுவப் பெருந்தகை வழி குறட்பாக்களில் அமைத்துள்ளது போற்றுதற்குரியது.

திறமை கசிவு:

முதல் 5 குறள்களில் திறமை கசிவு ஏற்படுவதன் காரணம் பயன் பற்றி கூறி பின் அதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் வரும் இழப்பு பற்றி எடுத்துக் கூறி பருவகாலங்களில் பறவைகள் இடம்பெயர்ந்து சென்று தன் வினைமுடித்து மீண்டு தன் இருப்பிடம் வருவது போல் வந்துவிடுதல் பற்றி பகுத்து ஆய்ந்து கூறுகிறார். தாம் பெற்றதை தம் மக்கள் பெற்றிட உதவ வேண்டுகிறார்.

திறமை கசிவு அடைபட்டால் வளர்ச்சி ஓங்கும் என உரைக்கிறார்.

“திறமை ஒழுக்கை அடைப்பின் உடையும்
உயர்வை முடக்கும் அடைப்பு”

தோல்வி மனப்பாங்கு தவிர்ப்போம்:

தோல்வி மனப்பான்மையைக் களைய வழி கூறியுள்ளார்.

“முயலாது போதலே தோல்வி எனப்படும்
வெல்லாது போதல் இலை”

முதல் ஐந்தாறு குறள்களில் அதன் சிக்கலையும் மீதம் 4 பாடல்களில் வழியையும் உணர்த்துகிறார்.

தரம் - நிரந்தரம்:

தரத்தின் அவசியம். வாழ்க்கையில் தரம் வெற்றியைத் தரும் என உறுதி கூறுகிறார்.

வள்ளுவனைப் போல் காதலையும் பாடியுள்ளார்.

பகுதி 2 – காதல் கவிகள் :

9 தலைப்புகள். காதல் ஒரு காட்சிப்பிழை என்று பகர்கின்றார். ‘காதலெனும் சாவினிலே’ சங்க அகப்பாடலாய் அமைந்துள்ளது. சங்கப் பாடலில் கூட தலைவிதான் அதிகம் வருந்துவாள். இங்கு ராம் இளன் உருகுகிறார் ஐஸ்கிரீமாய்!!

“காதல் செத்தே போயினும்
பேயாய் வந்தெனைக் கொல்லுது கண்ணே!!”

காதல் கனியுமோ:

இந்த தலைப்பில் முரண் சுவையில் நயம் பாடுகிறார்.

“உயிரை வருடிடும் உணர்வோ - இல்லை
உயிரைப் பருகிடும் பிணியோ – எதுவோ
நட்பில் தளிர்த்திட்ட காதல்”

மனத்திலொரு போராட்டம்:

இத்தலைப்பில்

“ஊழலுக்கு எதிர்நிற்கும்
ஹசாரே போராட்டமும்
காதலுக்கு எதிர்பார்க்கும்
எனது போராட்டமும்
உரியவர் ஏற்கும் வரை
கலங்காது தொடரும்”

சமுதாயச் சிக்கலைக் காதலோடு பிணைத்துள்ள பாங்கு பாராட்டுதற்குரியது.


பகுதி 3 – பொதுக்கவிதைகள்:

அச்சமில்லை அச்சமில்லை:

வேளாண்மை – உழவுத்தொழில் - சுற்றுச்சூழல் - மண்வளம் - நெகிழி – வெப்பத்தால் மழை பொய்த்து வரண்ட நிலம் என இவையாவும் பாடுபொருள்களாய் நிற்கின்றன. 3ஆம் மகாயுத்தம் நீரால் ஏற்படும். ஆனால் மனிதன் எதற்கும் அஞ்சவில்லை. ஊழல் கூளி கையூட்டு காலன் சூழ்ந்த நாட்டில் வளர்ச்சி இல்லை என்கிறார் இன்னிசை வெண்பாவால். ஆங்கில மோகம் குழந்தைத் தொழில் முதலியவற்றையும் சாடுகிறார்.

இக்கவிதை திருச்சித் தமிழ்ச் சங்கத்தில் போட்டியில் பரிசு வென்ற கவிதை.

தாய்:

தாயைப் போற்றுகிறார். என்றுமே தாயன்பை வேண்டுகிறார். தாய் ‘சாரல்’ தமிழ் மன்றத்தில் பரிசு பெற்ற கவிதை.

நண்பனே:

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப் பழக்கம் - நட்பும்
        ததையும் கொடையும் பிறவிக்குணம்”

என்கிறது பழம்பாடல்.

நண்பனைப் பிறவிக்குணத்தோடு பாடுகிறார். அக்கவிதை நட்பு சோழன் - பிசிராந்தையாரை நினைவூட்டுகிறது.

“ஒளி பரப்பும் பகலவன் அகன்று
இருள் பரப்பி அகன்றி நின்றாலும்
மருள் அகன்று நீங்கிட நிலவாய்நான்
அகன்று விரியும் குளிரொளி பரப்பித்
துயரம் அகன்று நீங்கிடத் துணைநிற்பேன்-நீ
தூரம் பறந்து அகன்று சென்றாலும்
பின்னால் பறந்திடும் என்னுயிர் அகன்றே”

என்கிறார்.

நட்பின் வருடலில் நட்பின் ஆழம் புரிகிறது. நட்பு என்றும் நிலைக்கட்டும்.

இனியதோர் உதயம்:

அவர் நடந்து வந்த பாதை. அரிமா நோக்கு. இனியதோர் உதயம் - நம்பிக்கை ஒளியால் ஒளிர்கிறது. வரும் தலைமுறைக்கு வழித்துணையாய்.

கல்லூரித் தமிழ் மன்றம்:

வளர்த்த மறத் தமிழன் புதியதோர் உலகு படைக்கின்றான்.

பிரிய மனமின்றி:

கல்லூரி நண்பர்களுக்கு

“மாறாதது மாற்றம் மட்டுமல்ல
நம் நட்பும் நேசமும் தான்”

என்று கல்வெட்டு பதிக்கின்றார்.


பகுதி 4 – சித்திர கவி

வில்-அம்பு:

இன்னிசை வெண்பாவால் ஆன சிலேடை - இரட்டுற மொழிதல் பாடல்.
“வளைந்திரு பண்பாற்றல் கொண்டு
விரிவுசுருக்கு பயிலும்”
வில் வளைந்து சுருங்கும். குடிசார் பொறியாளர் - விரிவு சுருக்கம் பயில்வர்

உன் சொல் நோக்கி:

காதலியின் சொல்லுக்காக உருகி வழிகின்றார். ஆறாரைச் சக்கரமாய்.

அச்சு, நாணுகிறாள் தமிழ்த்தாய் பூணுகிறாள் புதுநகை, தேனீ பந்தம், வேண்டும் வேண்டாம் என அத்தனையும் அருமை !

“வேண்டாதது கொன்று வேண்டியது கொண்டு
வேண்டியவாறு வாழ்ந்திடு என்றும் !!”


நிறைவாக:

ராம் இளனின் சித்திர கவிக்குப் பொறியூட்டியவர் பாம்பன் சுவாமிகள். அவர் அருளுடன் தமிழ் படைத்துள்ளார்.

ராம் இளனே -எனக்கு
கம்பன் கவிக்கு வித்தான – 
காவிய நாயகனோ?!!”
என்றே தோன்றுகிறார்.
வில் - அம்பு ஏந்தி !!

தமிழ் கடலில் அமுதாக அவர் படைப்பு நிலைக்கட்டும் !!
வாழ்க வளமோடு !!

Monday, June 10, 2013

நீ எங்கே??

நண்பர்களை விட்டுப் பிரிந்து தனியே வாடுபவர்களுக்காக இக்கவிதை

இன்றைய தினத்தில் (June 10) பிறந்தநாள் காணும் தோழி சிவதர்ஷினிக்கு சமர்ப்பணம்



நட்பின் சாரம் எங்கே? – உன்
அன்பின் ஈரம் எங்கே?

நட்பின் சாரம் எங்கே? – உன்
அன்பின் ஈரம் எங்கே?
கவலை உற்ற பொழுதில்
கை கொடுக்கும் கரங்கள் எங்கே?

சுற்றம் மகிழ வைக்கும்
உன் பூத்த முகமும் எங்கே?
நெஞ்சம் நெகிழ வைக்கும்
உன் பிஞ்சு மனமும் எங்கே?

கோபம் கொள்ள வைக்கும்
உன் கொடுமை மொக்கை எங்கே?
சிறிதாய்ப் பயந்த போதும்
நீ தெறிக்கும் கதறல் எங்கே?

செவியில் தேனை வார்க்கும்
உன் கவிதைக் குரலும் எங்கே?
செவியைச் செவிடாய் ஆக்க
நீ கூவும் கூச்சல் எங்கே?

தூரம் நீண்ட போதும்
நல் நேசம் குறைவ துண்டோ?
காலம் கடந்த போதும்
நம் நட்பும் தேய்வ துண்டோ?

மாற்றம் இல்லா ஒன்று
நம் நட்பின் நேசம் அன்றோ?
எல்லை இல்லா அன்பு
உன் நட்பு தருவ தன்றோ?

நட்பின் நேசம்
என்றும் எங்கும்
தேயா தென்று
சொல்வேன் நானே

சொல்லும் சொல்லை
மெய்யாய் ஆக்க
நீயும் என்றும்
உடன் நிற் பாயா?

காலம் கடக்கும் போது
நம் நட்பை மறத்தல் நன்றோ?
பிறரைப் போல அன்றி
உன் நட்பு நிலைக்கும் அன்றோ?

மாற்றம் இல்லா ஒன்று
நம் நட்பின் நேசம் அன்றோ?
எல்லை இல்லா அன்பு
உன் நட்பு தருவ தன்றோ?

                                     - இளன்